தினம் ஒரு பாசுரம் - 77
தினம் ஒரு பாசுரம் - 77
மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம்
உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட,
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடி, அவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே.
---பெரிய திருமொழி (திருமங்கை மன்னன்)
___________________________________________________________
இன்று கிருஷ்ண ஜெயந்தி! ஆகையால், ஒரு ஒரு கிருஷ்ணத் தலப் பெருமாள் பாசுரத்தை அனுபவிப்போம். இது திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாளை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தருளிய ஓர் அற்புதமான பாசுரம்.
திருக்கண்ணமங்கை திவ்யதேசம் பஞ்ச கிருஷ்ணத் தலங்களில் ஒன்றாகும். மற்றவை
லோகநாதப் பெருமாள் கோவில் - திருக்கண்ணங்குடி
கஜேந்திரவரதர் கோவில் - கபிஸ்தலம்
நீலமேகப்பெருமாள் கோவில் - திருக்கண்ணபுரம்
உலகளந்தபெருமாள் கோவில் - திருக்கோவிலூர்
இத்திருத்தலம் கும்பகோணம் அருகிலுள்ள திருநறையூரை அடுத்து இருக்கிறது. இத்தலத்தைப் பற்றிய இப்பாசுரம், திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில், ஏழாம்பத்தில், பத்தாம் திருமொழியில் உள்ளது. இப்பதிகத்தில் இருக்கும் பாசுரங்கள் அனைத்தும் மிகச் சிறப்பு வாய்ந்தவை. பதிகத்தின் பத்து பாசுரங்களில், திருக்கண்ணமங்கைப் பெருமானின் பெருங்கீர்த்தியும், கல்யாண குணங்களும் மிக நேர்த்தியாக வெளிப்படும். மற்ற பாசுரங்களையும் வாசியுங்கள், எளிமையானவை, பொருள் எளிமையாக விளங்கும்!
தல வரலாறு
மகாலட்சுமி தவம் செய்து பக்தவத்சலப் பெருமாளைக் கைப்பிடித்த தலம் என்பதால் இவ்விடம் லட்சுமி வனம் என்றும் அழைக்கப்படுகிறது. சாபத்தால் துன்புற்ற சந்திரன் இங்கு அமைந்த புஷ்கரணியில் நீராடி சாபவிமோசனம் பெற்றான் என்பதும் பெருமாள், பிராட்டியை திருமணக் கோலத்தில் தினம் கண்டு வழிபட முனிவர்கள் தேனீ வடிவில் உள்ளனர் என்பதும் தொன் நம்பிக்கை.
பத்தராவி என்ற மற்றொரு மூலவர் திருநாமத்துக்கு காரணம் உண்டு.
பத்தராவி = (பக்தர்+ஆவி) அதாவது, பக்தர்களுக்கு வேகமாக வந்து அருளுபவர் என்ற பொருளில் அமைந்தது.
தாயார் - அபிஷேகவல்லி
பாசுரப்பொருள்:
மண்ணாடும் விண்ணாடும் - பூவுலகையும், (இமையவர் உலகம், சுவர்க்கம் போன்ற 6) வான் உலகங்களையும்
வானவரும் தானவரும் - தேவர்களையும், அசுரர்களையும்
மற்றுமெல்லாம் - இன்னபிற உயிர்களையும்/உயிரில்லாப் பொருள்களையும்
உண்ணாத பெருவெள்ளம் - அடங்க மாட்டாமல் பெருகி வந்த பிரளயம் பெருவெள்ளம்
உண்ணாமல் - அடித்துச் சென்று அழித்து விடாதபடி
தான் விழுங்கி - தான் (அவ்வனைத்தையும்) விழுங்கி
உய்யக் கொண்ட - (தன் வயிற்றில் வைத்துக்) காத்தருளிய
கண்ணாளன் - பரம அருளாளனும்
கண்ணமங்கை நகராளன் - திருக்கண்ணமங்கை நகரில் வீற்றிருக்கும் தலைவனும் (ஆன எம்பெருமானின்)
கழல் சூடி - திருவடிகளில் தலை பதித்து
அவனை உள்ளத்து எண்ணாத - அவனை (அந்த பக்தவத்சலனை) சிந்தையில் வைக்காத
மானிடத்தை - (பயனற்ற பிறவி எடுத்த பூவுலக) மாந்தரை
எண்ணாத போதெல்லாம் - எண்ணப் பெறாத சமயமெல்லாம்
இனியவாறே - (எனக்கு) இனிதாகவே கழியுமே!
பாசுரக்குறிப்புகள்:
திருமங்கை மன்னனே ஓர் ஆணழகர். ஆழ்வார் வடிவழகை மணவாள மாமுனிகள் வடிவழகு சூர்ணிகையில் விவரிப்பது அற்புதமாக இருக்கும்... அதில் ஒரு பகுதியைத் தருகிறேன்.
ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,
பரந்த விழியும், பதித்த நெற்றியும், நெறித்த புருவமும்
சுருண்ட குழலும், வடிந்த காதும் அசைந்த காது காப்பும்,
தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும், அகன்ற மார்பும்,
திரண்ட தோளும் நெளித்த முதுகும், குவிந்த இடையும்,
அல்லிக்கயிறும், அழுந்திய சீராவும், தூக்கிய கருங்கோவையும்
தொங்கலும் தனி மாலையும், தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும்
சாற்றிய திருத்தண்டையும், சதிரான வீரக்கழலும்,
தஞ்சமான தாளினையும், குந்தியிட்ட கனைக்காலும்.....
அத்தகைய பேரழகரான திருமங்கை ஆழ்வாரே, பக்தவத்சலப்பெருமாளின் வடிவழகில் மயங்கியதன் விளைவே, அன்னார் அருளிய அற்புதப் பாசுரங்களாம். இன்னொரு விஷயம், சென்னை திருநின்றவூர் பெருமாள் திருநாமமும் பக்தவத்சலர் தான். இந்த இரண்டு பெருமாள்களையும் ஒருசேரப் போற்றி ஆழ்வார் அருளிய நற்பாசுரம் ஒன்று உண்டு. திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள், பிராட்டியின் விருப்பத்தை பூர்த்தி செய்ய, தானே கண்ணமங்கை சென்று ஆழ்வாரிடம் பாடக்கேட்டுப் பெற்ற பாசுரம் இது :-)
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை
இம்மையை மறுமைக்கு மருந்தினை,
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும்
ஐயனைக் கையிலாழி ஒன்றேந்திய
கூற்றினை குருமாமணிக் குன்றினை
நின்றவூர் நித்திலத் தொத்தினை
காற்றினைப் புனலினைச் சென்று நாடி
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே!
பரமன் ஆனவன், பிரளய காலத்தில், உலகங்களை தன் (பொன்) வயிற்றில் வைத்துக் காத்த செய்தியை பல திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களில் காணலாம். திருமங்கையாழ்வாரே “எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே” என்று தொடங்கும் திருப்பாசுரத்தில்
“செஞ்சுடரும் நிலனும் பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புக பொன் மிடறு (=வயிறு) அத்தனைபோது அங்கு ஆந்தவன்”
என்று குறிப்பிட்டு தொடர்ந்து கேலியாக
“காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டு இருந்தவனே” என்று நிறைவு செய்கிறார்.
அதாவது, “இது போல ஓர் அதிசயம் கண்டதுண்டா? ஏழு உலகங்களையும் விழுங்கி பொன் வயிற்றில் வைத்துக் காத்தவனை இப்போது பாரீர்! (கோகுலக் கண்ணனாக) தயிர், வெண்ணெய் களவாடித் தின்று ஆய்ச்சிமார்கள் கட்டிய கயிற்றில் கட்டுண்டு நிற்கிறான் (=கட்டுண்டுக் கிடப்பது போல மாய்மாலம் செய்கிறான் :-))”
திருமங்கையாழ்வார் உகந்து போற்றிய திருத்தலம் திருக்கண்ணமங்கை!
“நெருநல் கண்டது நீர்மலை, இன்று போய்
கருநெல் சூழ் கண்ணமங்கையுள் காண்டுமே”
என்று மற்றொரு பாசுரத்தில் ”கண்ணமங்கைக்கு ”இன்றே” சென்று வழிபடு” என்று அடியவர்க்கு கட்டளை இடுகிறார்!
“பூணார மார்வனைப் புள்ளூரும் பொன்மலையை
காணாதார் கண் என்றும் கண்ணல்ல கண்டாமே”
என்று பிறிதொரு பாசுரத்தில் அப்பெருமாளை காணாத கண்கள் கண்களே இல்லை என்றும் திருமங்கையாழ்வார் அருளுகிறார்!
---எ.அ.பாலா
2 மறுமொழிகள்:
வீடு மாற்றும் பணியில் இருந்ததால், இன்றுதான் வாசிக்க இயன்றது. அற்புதம்.நெகிழ்ந்தோம்.
வாசித்து மகிழ்ந்ததில் எனக்கு மகிழ்ச்சி, ஊக்கமும் கூட
Post a Comment